கரூர் உயிரிழப்புகள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடவில்லை என தமிழக முதல்வர் விஜய் பேசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், திமுக மற்றும் அதிமுக இணைந்த ஆட்சி அமைக்கும் முயற்சி, ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காதது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், 'ஸ்டாலின் சார் வாயைத் திறங்க' என்றும் அவர் சவால் விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, மக்கள் முன் தொடர்ந்து நடிக்கும் முதல்வர் விஜய் அவர்களே, மதுராந்தகத்தில் உங்கள் 'டயலாக் டெலிவரி'யைப் பார்த்தேன். உங்களுக்கு சில கேள்விகள் உள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.
'அதிமுகவிலிருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தியுள்ள மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு, 'தவெக தூய சக்தி, திமுக தீய சக்தி' என எப்படி உங்களால் கூச்சமின்றிப் பேச முடிகிறது? வாக்களித்த மை விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே, NDA கூட்டணி எம்.எல்.ஏ-க்களைத் தூக்குவதுதான் தூய சக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்து, 'தவெகவிடம் எவ்வளவு வாங்குனீங்க?' என்று மக்களே கேட்டு விரட்டி அடிப்பது கூடத் தெரியாதவரா நீங்கள்?' என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுகவும் பாஜகவும் வேறு வேறில்லை என விஜய் பேசியது குறித்தும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 'சட்டமன்றத்தில் 'பாஜக' என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராக இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது யாரென நேரலையில் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா? கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனைப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறீர்கள்? பாஜகவை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'திமுக மாதிரி படிப்படியாக, தகுதி வாய்ந்தவர்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கிறேன்' என அந்நியன் போலப் பேசியவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் 'கஜானா காலி' என அம்பி மோடில் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் லட்சணமா? உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம் இவ்வளவுதான்!' என ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
பெண்களை திமுகவினர் அவதூறாகப் பேசுகிறார்கள் என்ற பொய்யை நீங்கள் பேசும்போது, உங்கள் 'Virtual Abuser'-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள். 'ஜெம் வீரமணி வழக்கைப் பற்றி வாயைத் திறங்க ஸ்டாலின் சார்' என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்… பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, 'எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்' என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ திமுகவோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், 'முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?' என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir' என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

