முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தற்போது பட்டிமன்ற பேச்சாளராக மாறிவிட்டதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 'என்னை எப்போது பார்த்தாலும், முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் நன்றாக பேசக்கூடியவர் என பாராட்டுவார். ஆனால் தற்போது அவர் அரசியலுக்காக பேசுகிறார். முதல்வர் விஜய் ஒரு நேரலை நாயகன். சட்டசபையில் என்ன நடக்கிறதோ, அதை முழுமையாக நேரடியாக ஒளிபரப்புகிறோம். திருக்குறள் ஒலிப்பது முதல் சட்டசபை முடியும் வரை நேரலை செய்யப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக பார்த்து வருகின்றனர்' என்று கூறினார்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதை காண்பிக்கவில்லை என அவர் சட்டசபைக்கு வெளியே கூறியதை சுட்டிக்காட்டிய அமைச்சர், 'ஆனால் தற்போது எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது. முதல்வர் சட்டசபையில் பேசும்போது தி.மு.க.,வினர் எழுந்து நின்று கோஷமிட்டனர். இது நியாயமா?' என கேள்வி எழுப்பினார்.
'எதிர்க்கட்சித் தலைவர் வரிக்கு வரி விமர்சனம் செய்தார். நாங்கள் யார் தயவிலும் ஆட்சி நடத்தவில்லை. மக்களின் தயவிலும், குறிப்பாக பெண்களின் ஆதரவிலும் தான் ஆட்சி நடத்துகிறோம்' என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தற்போதைய சட்டசபை வளாகத்தில் இடநெருக்கடி இருப்பதாகவும், பார்வையாளர்கள், தலைவர்களை சந்திக்க வருபவர்கள் என கூட்டம் அதிகரிப்பதால் புதிய தலைமைச்செயலகம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் நலன் சார்ந்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறினார்.
பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் செயல்படுவதாகவும், அந்த நிறுவனங்களின் இடங்களுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்துவது தான் சரியான நடைமுறை என்றும், அதனால் தான் லண்டனில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அமைச்சர் விளக்கினார். முன்னாள் முதல்வர் பழனிசாமி கோட் சூட் அணிந்து வெளிநாடு சென்றதை நினைவில் வைத்துள்ளதாகவும், முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்ததும் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் பேசுவது அவரது உரிமை என்றும், அவர் அனுபவமிக்கவர் என்றும், அவர் கூறுவதில் எவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமோ அவற்றை ஏற்றுக்கொள்வோம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
