பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்பைடர் மேன்' தொடரில் பீட்டர் பார்க்கரின் நண்பனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஜேகப் பேட்டலான், தனது நீண்ட நாள் காதலியான வெரோனிக்கா லீஹோவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த செய்தி வெளியானதை அடுத்து, அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் – பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தில் ஜேகப் பேட்டலானின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. முன்னதாக, 'ஸ்பைடர் மேன்' படத்தின் விளம்பரப் பணிகளின் போது, ஒரு செய்தி பேட்டியின் போது, ஜேகப் பேட்டலான் நகைச்சுவையாக, 'எனது மனைவி என்னை பெரிய நாய்க்குட்டி என்று அழைப்பார்' என்று குறிப்பிட்டார். இந்த கருத்து, 29 வயதான நடிகர் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம்பியிருந்த ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.
இந்த பேட்டிக்குப் பிறகு, இணையவாசிகள் ஜேகப் பேட்டலானின் திருமணம் குறித்த தகவல்களைத் தேடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். அவர் இத்தனை நாட்களாக ரகசியமாக வைத்திருந்த தனது திருமண வாழ்க்கை குறித்த செய்தி, அவரது வாயாலேயே வெளிவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு ஜேகப் பேட்டலானுக்கும் வெரோனிக்கா லீஹோவ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதன் பிறகு அவர்களின் திருமணம் குறித்த எந்த விவரங்களும் வெளிவரவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜேகப் மற்றும் வெரோனிக்கா ஜோடிக்கு சில மாதங்களுக்கு முன்பு பிரான்சில் திருமணம் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஜோடி 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். மால்டோவா நாட்டைச் சேர்ந்த வெரோனிக்கா, அமெரிக்காவில் குடியேறி தற்போது இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றி வருகிறார். அவர்களின் திருமணம் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதேபோல், 'ஸ்பைடர் மேன்' படத்தில் பீட்டர் பார்க்கர் மற்றும் மேரி ஜேன் கதாபாத்திரங்களில் நடித்த டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா ஜோடியும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கும் ரகசியமாக திருமணம் நடந்ததாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இந்த திருமணம் குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

