கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அறிவித்தபடி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
தர்மபுரி – காவிரி உபரி நீர் திட்டம் போன்ற முக்கிய நீர்பாசன திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூவம் நதி தொடர்பான திட்டத்தில் உரிய தெளிவு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 21 மாநிலங்களில் சேவை உரிமை பெறும் சட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் சௌமியா அன்புமணி கூறினார். இருப்பினும், விவசாய கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில், அது நிகழாதது தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
