வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் காரி சோபர்ஸ் மறைவு: கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு

சர் காரி சோபர்ஸ்

கிரிக்கெட் வரலாற்றின் மாபெரும் ஆல்-ரவுண்டராகப் போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சர் காரி சோபர்ஸ் தனது 89வது வயதில் காலமானார். அவரது மறைவுச் செய்தி, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், சர் காரி சோபர்ஸின் மறைவை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. 1936ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று பார்படாஸில் பிறந்த சோபர்ஸ், தனது பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் திறமைகளால் உலக கிரிக்கெட் அரங்கில் தனித்துவமான அடையாளத்தைப் பதித்தார்.

தனது 17வது வயதிலேயே வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் அறிமுகமான சர் காரி சோபர்ஸ், மொத்தம் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள் அடித்து 8,032 ரன்களைக் குவித்துள்ளார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 57.78 ஆக இருந்தது. மேலும், இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும் அவர் 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஃபீல்டிங்கில் 109 கேட்ச்களையும் பிடித்து அசத்தியுள்ளார்.

சர் காரி சோபர்ஸ், 1958ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 365 ரன்கள், அன்றைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக அமைந்தது. இது ஒரு மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

மேலும், 1968ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி, இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் படைத்தார். அவரது இந்தச் சாதனை இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவைகளைப் பாராட்டி, பிரிட்டன் அரசு அவருக்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும், விஸ்டன் அமைப்பின் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் ஆல்-ரவுண்டரின் மறைவு, கிரிக்கெட் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய வீரர்கள் சர் காரி சோபர்ஸ்-ஐ நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றனர். அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் சோபர்ஸ் உடன் உரையாடினர். இந்தச் சந்திப்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போது ஒரு நெகிழ்ச்சியான நினைவாக அமைந்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version