சர் கார்பீல்ட் சோபர்ஸ்: கிரிக்கெட்டின் ஆல்-ரவுண்டர் ஜாம்பவான்

கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ்

கிரிக்கெட் உலகில் தனித்துவமான பல சாதனைகளைப் படைத்த சர் கார்பீல்ட் சோபர்ஸின் வாழ்க்கை ஒரு கற்பனைக் கதை போலத் தோன்றினாலும், அது நிஜம்.

1966-ல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனாக சோபர்ஸ் திகழ்ந்தார். அந்தத் தொடரில் அவர் 722 ரன்கள் குவித்தார், 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார், 10 கேட்சுகளைப் பிடித்தார், மேலும் ஐந்து டாஸ்களையும் வென்றார். இந்தச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இது ஒரு தனிநபரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் சாதனையாகும்.

1972-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக லெவன் அணி விளையாடிய தொடரில், 36 வயதான சோபர்ஸ் கேப்டனாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவின் கடைசி பேட்ஸ்மேனான டென்னிஸ் லில்லி கிரீஸை நோக்கி வந்தபோது, விக்கெட் கீப்பர் ஃபரூக் இன்ஜினியரிடம், 'இன்னும் இரண்டு அடிகள் பின்னால் போ. வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று இவருக்கு நான் காட்டப் போகிறேன்' என்று சோபர்ஸ் கூறினார். அதன்பிறகு, வேகமாக ஓடிவந்து பந்துவீசிய சோபர்ஸ், அசுர வேகத்தில் பவுன்சர்களை வீசி லில்லியை கடைசி பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார். லில்லி வெளியேறும்போது, அடுத்த இன்னிங்ஸில் இதேபோன்ற வேகப்பந்து வீச்சால் பதிலடி கொடுப்பேன் என்று சோபர்ஸிடம் கூறினார். அதற்கு சோபர்ஸ், 'Iam Waiting' என்று பதிலளித்தார். பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய சோபர்ஸ், 254 ரன்களைக் குவித்து அசத்தினார்.

1963-64 ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரின் போது, தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு சோபர்ஸ் ஒரு முக்கிய வீரராக விளங்கினார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் டெட் டெக்ஸ்டர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், எதிரணி வீரர்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்விகளுக்கு, 'நான் அவரை அவுட் செய்கிறேன். நான் ரன்களைக் குவிக்கிறேன்' என்று சோபர்ஸ் பதிலளித்தார். அவர் சொன்னபடியே, எதிரணி கேப்டன் பில் லாரி உட்பட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, பேட்டிங்கில் 124 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, தெற்கு ஆஸ்திரேலியா அணி ஷெஃபீல்ட் ஷீல்டை வெல்ல உதவினார். அந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக கேட்சுகள் என அனைத்திலும் சோபர்ஸே முதலிடம் பிடித்தார்.

கடந்த 2000-ஆம் ஆண்டில், விஸ்டன் இதழ் நடத்திய 20-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் தேர்வில், டான் பிராட்மேன் 100 வாக்குகளைப் பெற்ற நிலையில், சோபர்ஸ் 90 வாக்குகளைப் பெற்றார். வாக்களித்த 100 நடுவர்களில் 48 பேர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், வேறு எந்த வீரரும் 30 வாக்குகளுக்கு மேல் பெறாத நிலையில் சோபர்ஸின் 90 வாக்குகள் தனித்து நின்றன.

சர் கார்பீல்ட் சோபர்ஸ், பேட்டிங்கில் 58 சராசரியைக் கொண்டிருந்தார். ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர். ஒரு இன்னிங்ஸில் 57 ஓவர்கள் வரை இடைவிடாது பந்துவீசும் ஆற்றல் படைத்தவர். இடதுகை வேகப்பந்து வீச்சு, இடதுகை சுழற்பந்து வீச்சு மற்றும் சைனாமேன் பந்துவீச்சு என பல திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்தியவர்.

கிரிக்கெட்டின் ஆல்பா மேல், ராக்கிங் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் மறைந்தாலும், கிரிக்கெட் உள்ள வரை அவரது புகழ் நிலைத்து நிற்கும். அவர் ஒரு மாபெரும் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version