இளையராஜாவின் இசையில் 80-களில் ஒலித்த எஸ்.ஜானகியின் குரல், இன்றும் பலராலும் ரசிக்கப்படுகிறது. 25 மொழிகளில் பாடியுள்ள பெருமைக்குரிய எஸ்.ஜானகி, பல பாடல்களை தானே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா கிராமத்தில் 1938-ல் பிறந்த எஸ்.ஜானகி, மூன்று வயதிலிருந்தே இசை பயின்றார். ஒன்பது வயதில் தனது முதல் மேடை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடகங்களில் இடைவேளைகளில் பாடி தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்த அவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாகப் பணியில் சேர்ந்தார்.
1957-ஆம் ஆண்டு 'விதியின் விளையாட்டு' படத்தில் தனது முதல் பாடலைப் பாடினாலும், அது முதலில் வெளியாகவில்லை. 'எம்.எல்.ஏ' என்ற படத்தில் கண்டசாலாவுடன் இணைந்து பாடிய 'நீயாசா அடியார்' என்ற பாடலே முதலில் வெளிவந்தது. தனது முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் நூறு பாடல்களைப் பாடி சாதனை படைத்தார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி போன்ற பல்வேறு மொழிகளிலும் அவர் தனது குரல் பதித்துள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமையையும் எஸ்.ஜானகி பெற்றுள்ளார்.
இளையராஜாவின் முதல் படமான 'அன்னக்கிளி'-யில் அவர் பாடிய 'மச்சானா பாத்திங்களா' பாடல், இளையராஜா – ஜானகி இசைக் கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. இவர்களின் கூட்டணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, கொங்கனி, துளு, சௌராஷ்டிரா, வங்காளம், சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
1992-ஆம் ஆண்டு சிங்களம் சென்றபோது, அவருக்கு 'ஞான கான சரஸ்வதி' என்ற பட்டம் வழங்கப்பட்டது. 'மௌனப் போராட்டம்' என்ற தெலுங்குப் படத்தில் இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே தேவா' பாடல் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இன்றும் பலரால் பாட முடியாத கடினமான பாடலாகக் கருதப்படும் இந்தப் பாடலை அவர் மிக நேர்த்தியாகப் பாடியிருப்பார்.
ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து முன்னணிப் பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடனான எஸ்.ஜானகியின் கூட்டணி, தென்னிந்திய இசைத் துறையில் ஒரு தனி முத்திரையைப் பதித்தது. எஸ்.பி.பி. தனது பேட்டிகளில் எஸ்.ஜானகியைப் பற்றிப் பேசாமல் இருந்ததே இல்லை.
பாடலில் உள்ள உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், நடிகைகளுக்கு ஏற்றவாறு குரலை மாற்றியும் பாடும் வல்லமை பெற்றவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் இவர் நிகரற்றவர். 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே', 'செந்தூரப் பூவே', 'காற்றில் எந்தன் கீதம்', 'நெஞ்சினிலே நெஞ்சினிலே', 'ராதைக்கேற்ற கண்ணனோ' போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.
திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். ரஹ்மான் இசையில் 'உயிரே' படத்தில் 'நெஞ்சினிலே' பாடலும், 2014-ல் அனிருத் இசையில் 'VIP' திரைப்படத்தின் 'அம்மா அம்மா' பாடலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பாடிய பாடல்களாகும். நான்கு தேசிய விருதுகள், 11 கேரள மாநில விருதுகள், 10 நந்தி விருதுகள், 6 தமிழ்நாட்டு மாநில விருதுகள், 1 ஒடிசா மாநில விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். 2013-ஆம் ஆண்டு அவருக்கு 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டது. தனது 55 ஆண்டுகால இசை அனுபவத்திற்கு தாமதமாக வந்த விருது எனக் கூறி, அவர் இந்த விருதை நிராகரித்தார்.

