அதிமுகவின் மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், தனது முடிவுக்கு எந்தவிதமான கோபமோ, வருத்தமோ, தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாததோ காரணம் அல்ல என்றும், மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக என்பது தனக்கு ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, அது தனது குடும்பத்தின் ஒரு அங்கம் என்றும், இது தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்து எழுதும் மனப்பூர்வமான கடிதம் என்றும் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 1987-ஆம் ஆண்டு தனது தந்தை மறைந்த சிங்கை கோவிந்தராசு வார்டு செயலாளராக இருந்தபோது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அவரது பெற்றோரின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியது தங்கள் குடும்பம் பெற்ற பெரும் பாக்கியம் என நினைவுகூர்ந்துள்ளார். தனக்கு ஜி. ராமச்சந்திரன் என பெயர் சூட்டியது புரட்சித்தலைவி ஜெயலலிதா என்றும், ஒரு சாதாரண மில் தொழிலாளியாக இருந்த தந்தையை சட்டமன்ற உறுப்பினராக உயர்த்தியதும் அம்மாதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறு வயதிலிருந்தே புரட்சித்தலைவி அம்மாவை நேரில் சந்தித்து, அவருடைய தலைமையில் பணியாற்ற வேண்டும் என்பதே தனது வாழ்நாள் கனவாக இருந்ததாக சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 18 வயதில் கட்சியில் சேர்ந்த அவர், இளைஞர் பாசறை வார்டு செயலாளராக நியமிக்கப்பட்டார். அம்மாவை சந்திக்க பலமுறை முயற்சித்தும், போயஸ் கார்டன் சாலையில் பல மணி நேரம் காத்திருந்த நாட்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். படித்த இளைஞர்களை அம்மா மதிப்பார் என்பதால், தனது கல்வியின் மூலம் அவரது கவனத்தை ஈர்க்க முடிவு செய்து அதற்காக உழைத்ததாகக் கூறியுள்ளார்.
மனம் தளராமல் தொடர்ந்து முயன்று, CAT தேர்வின் மூலம் 2013-ல் IIM Ahmedabad-ல் சேர்ந்ததாகவும், அங்கு மாணவர் நலப் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படிப்பு முடிந்ததும் வளாக வேலைவாய்ப்புகளை நிராகரித்து, புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் பணியாற்றப் போவதாக வெளிப்படையாக அறிவித்ததாகவும், அந்த செய்தி அம்மாவின் கவனத்திற்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்குப் பிறகு, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
2016 மார்ச் 21 அன்று அம்மாவை நேரில் சந்தித்தபோது, தனக்கு பெயர் சூட்டிய தலைவரும், குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய தலைவரும் நேரில் நின்ற அந்த நொடியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும், சிறு வயதிலிருந்தே சுமந்த கனவு நனவான நாள் அது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது அம்மா, 'உங்க அப்பா கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். நீங்களும் அவரைப் போல இருக்க வேண்டும்' என்று கூறிய வார்த்தைகள் இன்றும் மனதில் ஒலிப்பதாகவும், அதை தனது வாழ்க்கைக்கான பொறுப்பாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி தனக்கு வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதாகக் கூறிய அவர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர், மண்டல செயலாளர், மாநிலத் தலைவர், மாணவர் அணி மாநில செயலாளர் என எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் முழு மனதுடன் பணியாற்றியதாகக் கூறியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட இளம் கட்சி பேச்சாளர்களை உருவாக்கியது தனக்கு மிகுந்த நிறைவைத் தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2016, 2019, 2021 மற்றும் 2026 தேர்தல்களில் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாக உழைத்ததாகவும், 2024 மக்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், அரசியல், தனிப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நடந்த சில நிகழ்வுகள் மிகுந்த மனவேதனையை அளித்ததாகவும், தனது கருத்துகளையும் கவலைகளையும் கட்சித் தலைமையிடம் முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், தனது மனசாட்சியுடன் சமரசம் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது, இந்த முடிவைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விலக முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில், தனது மீது நம்பிக்கை வைத்து பல்வேறு வாய்ப்புகளை வழங்கிய திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், தன்னை வழிநடத்திய மூத்த தலைவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் தன்னுடன் இணைந்து பயணித்த அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அனைத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தான் கட்சியில் இருந்து விலகினாலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். விதைத்த மனிதநேயமும், புரட்சித்தலைவி அம்மா தன் மீது வைத்த நம்பிக்கையும் வாழ்நாள் முழுவதும் தன்னை வழிநடத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

