வெற்றி அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை: சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வமான திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப் பொருளாதார நடவடிக்கைகள் எவையுமின்றி, 'வெற்றி' என்ற பெயரை மட்டுமே தாங்கி நிற்கும் ஒரு வெற்று அறிக்கையாகவே இது தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கோ எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது. தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடுகையில், பள்ளிக்கல்வித்துறைக்கு 2,240 கோடி ரூபாய் குறைவாகவும், உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும், மின்துறைக்கு 5,350 கோடி ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை போன்ற அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது தமிழ்நாட்டை பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் என சீமான் எச்சரித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் என மிகக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. இதனால், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை தவெக அரசு முற்றாக ஏமாற்றியுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலை என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருப்பதாகக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது மோசடித்தனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கோரும்போது, அதனைப் பற்றிப் பேசாமல் கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவ எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாமல், தங்க மோதிரம் மூலம் வரவழைப்பதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியிருப்பது இந்த ஆட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்ற இலக்கை எப்படி அடைவோம் என்பது குறித்து எந்தத் தெளிவான வழிமுறையையும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடவில்லை. நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கவே தடுமாறுகிறார், அதன் உள்ளடக்கம் அதைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது. மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இன்றி, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ எந்தவொரு பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்களும், நடவடிக்கைகளும் இல்லாத, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என சீமான் கூறியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version