தற்போதைய வெற்றிக்கழக ஆட்சியின் பட்ஜெட் தான் பள்ளிக்கல்வித்துறைக்கு உண்மையான நிதி உயர்வை வழங்கியுள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
'2025-26 ஆம் நிதியாண்டிற்கான திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், இடைக்கால பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பு வரை 42,351 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாத நிலையிலும், ஊதிய வரம்புகள் மற்றும் செலவினங்களை மிகைப்படுத்தி, திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவிடப்பட்ட தொகையை விட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமின்றி உயர்த்தப்பட்டதாகும். இந்த தேவையற்ற நிதி உயர்விற்கு தவறான கணக்கீடுகளே காரணம்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்தவுடன், இந்த நிதி ஒதுக்கீட்டை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளைக் குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்ட தொகையை விட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதித்துறை செயலாளர் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 44,527 கோடி ரூபாய், மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி திறம்பட கையாளப்படும். இதன் முழுமையான பலன்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வி நிர்வாகத்திற்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்ற உதவும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

