இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வு குழுவின் செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் தேர்வு முறைகள் மீது முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவின் தேர்வு குறித்து அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹர்ஷித் ரானா, அதன் காரணமாக 2026 ஐபிஎல் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் எந்தவொரு உள்நாட்டுப் போட்டியிலும் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்கவில்லை. இருந்தபோதிலும், நேரடியாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஹர்ஷித் ரானாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் 4வது போட்டியில் விளையாடவில்லை. அதாவது, காயத்தில் இருந்து மீண்டு வந்து ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய சடகோபன் ரமேஷ், 'அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது உடற்தகுதியை எங்கும் நிரூபிக்காத ஹர்ஷித் ரானாவை எப்படி நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்தீர்கள்?' என்று தேர்வு குழுவை நோக்கி கேள்விகளை எழுப்பினார். 'முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில், அது தொடை அல்லது தசைநார் காயங்களுக்கு வழிவகுக்கும். அவர் 100 சதவீத உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பவில்லை என்பது தெளிவாகிறது. வெவ்வேறு வீரர்களுக்கு தேர்வு குழு வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது என்பதற்கு இதுவே ஆதாரம்' என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
ஹர்ஷித் ரானாவுக்கு காயம் ஏற்படுவதற்கு முன்பாகவே, ஜிம்பாப்வே தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை சடகோபன் ரமேஷ் சுட்டிக்காட்டினார். இதன் மூலம், அவரது பணிச்சுமையை தொடர்ந்து சமாளிக்க முடியாது என்பது அணி நிர்வாகத்திற்கு முன்பே தெரிந்திருந்தது என்று அவர் கூறினார். அதே சமயம், ஹர்ஷித் ரானாவின் திறமை மீது தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அவர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் 5 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரின் தேர்வு குறித்தும் சடகோபன் ரமேஷ் கருத்து தெரிவித்தார். வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதாலும், ரவி பிஷ்னோய் மீது அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை இல்லாததாலுமே வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார் என்று அவர் கூறினார். மான்செஸ்டரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமல் சொதப்பியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடைசி நேரத்தில் அவர் வீசிய இரண்டு நோ பால்கள் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற வழிவகுத்தன.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வைபவ் அரோரா உட்பட 3 வீரர்களை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியின் மோசமான ஆட்டம் மற்றும் வீரர்களின் தேர்வு முறைகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
