நிர்மல்குமார் போன்றோரை சேர்க்காதீர்கள் – விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுரை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல, சில நபர்களால் தற்போதைய ஆட்சிக்கு கேடு வரப்போகிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல கட்சிகளுக்குச் சென்று வந்த நிர்மல்குமார் போன்றோரை பக்கத்தில் சேர்க்காமல் இருப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வில் இருந்த நிர்மல் குமாருக்கு மற்றவர்களை விமர்சனம் செய்ய எந்த யோக்கியதையும் கிடையாது. அவர் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசக்கூடியவர். ஆர்.எஸ்.எஸ், அதிமுக, தற்போது த.வெ.க என பல கட்சிகளுக்குச் சென்று வந்துள்ளார். இன்னும் இந்த ஆட்சி முடிவதற்குள் அவர் எந்தக் கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும், உடனே சென்று முதலில் கையெழுத்துப் போட்டு உறுப்பினர் அட்டை வாங்குவது சிலருக்குப் பாரம்பரியமான பழக்கம். அதில் முதன்மையானவர் நிர்மல் குமார். அதேபோல ஆதவ் அர்ஜுனா போன்றவர்களும் எல்லா கட்சிக்கும் சுற்றிவிட்டுப் போவார்கள். ஆகையினால், அவர்கள் வைக்கும் வாதம் சரியாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டபோது, திமுக-வால் தான் அது தோற்கடிக்கப்பட்டது. எங்கள் தலைவர் தளபதி அவர்கள் அன்று கருப்புச் சட்டை அணிந்து, அந்தச் சட்ட மசோதாவையே எரித்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதற்குப் பிறகுதான் அது தோற்கடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. திமுக மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது—நாங்கள் கொடுத்த சில திருத்தங்களை மசோதாவில் சேர்த்து வைத்தால், அதை ஆதரிப்பதா இல்லையா என்பதைப் பார்த்துதான் முடிவு செய்ய முடியும். ஆனால், இவர்கள் ஊழலை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்பத் திசை திருப்புகிறார்கள்.

கோவையில் மாணவர் கொலை சம்பவம் நடந்துள்ளது. அன்று திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் 85 நாட்களுக்குள் தண்டனை பெற்றுத் தந்து தவறு செய்தவர்களை உள்ளே சிறைக்கு அனுப்பினோம். ஆனால், தூத்துக்குடி பெண் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், அவர்கள் கட்சியினரே சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் அளித்தும் 100 நாட்கள் ஆகியும் அதற்கு இன்னும் பரிகாரம் கிடைக்கவில்லை; கேசும் போடவில்லை, ஒன்றும் செய்யவில்லை. இதுதான் இன்றைய நிலைமை.

நேற்று ஒரு மாநாடு நடந்தது. எவ்வளவு பெரிய மாநாடாக இருந்தாலும், 'நான்காவது தூண்' எனப்படும் பத்திரிகையாளர்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், பத்திரிகையாளர்களையே உள்ளே விடவில்லை. அங்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை; முதலமைச்சரே பேசவில்லை. முதலீட்டாளர்கள் எல்லாம் வந்துவிட்டதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் தலைவர் அன்றைக்குக் கொண்டுவந்து போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டாம் கட்டத்திற்கான தொகையைப் போட்டிருக்கிறார்கள்; அவ்வளவுதான். அப்படி இருக்கும்போது பத்திரிகையாளர்களை அனுமதித்தால் என்ன? மக்களுக்கு உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தெரிந்துவிடும் என்பதற்காகவே இந்த ரகசியம். பத்திரிகையாளர்களையே அனுமதிக்காமல் ஒரு கூட்டத்தை நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

அதேபோல, சென்னையில் சொத்து வரி/வீட்டு வரி பயங்கரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைக்குக் கார்ப்பரேஷனில் 'சுய மதிப்பீடு' மூலம் வரி போடுகிறார்கள். அபார்ட்மெண்டில் 50 வீடுகள் உள்ள இடத்தில் இரண்டு பேருக்குத்தான் மதிப்பீடு செய்தார்கள் என்று பச்சையாகப் பொய் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மதிப்பீடு மற்றும் பட்டா இருக்கும். அப்படி தவறாக இருந்தால் CMDA மூலம் அந்த கட்டடங்களை இடிக்க வேண்டியதுதானே? அந்த அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதே! இப்படிப் பொய் பேசும் அமைச்சர்கள் தான் இன்றைக்கு இருக்கிறார்கள். நேற்றைய தினம் எங்கள் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் மேயருமான மா. சுப்பிரமணியம் கண்டன அறிக்கை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பெரிய கொதிப்பு ஏற்பட்ட பிறகு, தற்போது தற்காலிகமாக அதை நிறுத்தி வைப்பதாக சொல்கிறார்கள். நிரந்தரமான தீர்வை இவர்களால் சொல்ல முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிகாரிகளும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. இந்த வரி உயர்வைக் கைவிடாவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைப் பொறுத்தவரை, திமுக 'Fair Delimitation' என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஏற்றுக்கொண்டது. நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பதுதான் எங்கள் கொள்கை. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சொன்னோம். அவர் சர்க்காரியா கமிஷனைப் பற்றியெல்லாம் பேசுகிறார்; அப்போது அவர் பிறந்திருக்கவே மாட்டார். சர்க்காரியா கமிஷனுக்குச் சவால் விட்ட ஒரே தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் மட்டும்தான். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது; அவர்களால் ஒரு வழக்கையாவது போட முடிந்ததா? 2001-இல் இரவோடு இரவாகக் கலைஞரைக் கைது செய்தார்களே, அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில்தான் இருந்தார்கள்; ஒரு வழக்கையாவது நிரூபிக்க முடிந்ததா? இதெல்லாம் வரலாறு தெரிந்து பேச வேண்டும். அவர் நேத்துதான் கட்சி ஆரம்பித்து வந்திருக்கிறார்.

நான் விஜய்க்கு ஒரு அறிவுரை சொல்வதானால்—பல கட்சிகளுக்குச் சென்று வந்த இதுபோன்ற ஆட்களைத் தயவுசெய்து பக்கத்தில் சேர்க்காமல் இருப்பது அவருக்கு நல்லது. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதைப் போல, இந்த ஆட்சிக்கு கேடு இவர்களால் தான் வரப்போகிறது” என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version