ஹரியானா மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், ரோத்தக் நகரில் ஒரு வெறிநாய் சுமார் 30 நிமிடங்களில் 6 பேரை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
சம்பவம் நடந்த ஓல்ட் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில், ஒரு பெண் தனது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் அமைதியாக இருந்த தெரு நாய் ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து அவரது காலைக் கொடூரமாகக் கடித்துள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டி அடித்து அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, அந்த வெறிபிடித்த நாய் வெறும் 30 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து மேலும் 5 பேரை கடித்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும், சாலையைக் கடக்கவும் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சாலையோரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த நாய், திடீரென பாய்ந்து சென்று பொதுமக்களைக் கடித்த காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக, சோனிபட்டில் 6 மாதக் குழந்தையை பிட்புல் நாய் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரோத்தக்கிலும் இந்த வெறிநாய் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இது மாநிலம் முழுவதும் தெரு நாய்களின் அச்சுறுத்தல் குறித்து கவலையை அதிகரித்துள்ளது.
அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆபத்தான தெரு நாய்களை உடனடியாகப் பிடிக்கவும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால், ரோத்தக் நகரின் பல பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

