திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து விசாரணையில், மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் கவரில் மலம் கிடந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கும் துண்டுச் சீட்டும் தொட்டியின் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
யாரோ மர்ம நபர்கள் சிலர் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்துவிட்டு, இதுகுறித்த எச்சரிக்கை கடிதத்தையும் எழுதி வைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வடமதுரை காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார். அவரும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இதுபோன்று மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

