ஜென் ஸி தலைமுறைக்கு நடிகர் விஜய் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டதா அல்லது விஜய்க்கு ஜென் ஸி தலைமுறையின் மீது நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் பேசிய அவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி கல்வி இயக்கம் பிறப்பித்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்தார்.
கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சார்பில் கடந்த 17ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது வெளியானதாகவும், வெளியான 2 மணி நேரத்திலேயே அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியதாகவும் ஆர்பி உதயகுமார் குறிப்பிட்டார்.
தவெக அரசின் இந்த ஜனநாயக உரிமை பறிப்பு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அதிரடியாக அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கல்லூரி கல்வி இயக்கம் நேற்று அறிவித்து உத்தரவை வெளியிட்டது. கல்விக்கான உரிமை உள்ளிட்ட இந்த உரிமைகள் எப்பொழுதெல்லாம் அதிகார மையத்தால் பறிக்கப்படுகின்றதோ, மறுக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் இளைய சமுதாயமும், மாணவ சமுதாயமும் பொங்கி எழுந்து போராட்டக் களம் அமைத்து, உரிமை முழக்கத்தால் அதிகார மையத்தை அடிபணிய வைக்கும் என்று அவர் கூறினார்.
ஜென் ஸி தலைமுறையின் போராட்ட வரலாறு, இளைய தலைமுறை போராட்ட வரலாற்றை முதல்வர் விஜய் நன்கு அறிந்திருந்த போதிலும், இன்னும் ஒரு படி மேலே சென்று கண்மூடித்தனமாக ஜென் ஸி தலைமுறை, அவதாரம் புருஷராக, காக்க வந்த கடவுளாக, முதல்வர் விஜய் அவர்களை கொண்டாடி வரும் நிலையில், அவர்களின் அடிமடியில் கை வைக்கின்ற துணிச்சல் எப்படி வந்தது என்பது தெரியவில்லை என்றும் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கு எடுக்காத காரணத்தினால், மக்களுடைய உரிமைக்கான போராட்ட பட்டினி போராட்டத்தில் அவர் பங்கேற்ற வரலாறு மறைக்க முடியாதது என்றும், இதனால் தான் போராட்ட களத்தில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது, இளைஞர்கள் பங்கேற்கக் கூடாது என்று இப்படி அதிரடியான ஜனநாயக விரோத உத்தரவை பிறப்பிக்க துணிச்சல் வருகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்றைக்கு 35 சதவீதம் வாக்காளர்கள் விஜய் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம், ஆனால் 65 சதவீதம் மக்கள் விஜய் வேண்டாம், விசில் வேண்டாம், தவெக வேண்டாம் என்று தான் வாக்களித்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு உத்தரவை அறிவித்து திரும்பப் பெறுவது என்ன நடைமுறை என்றும், உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னால் அதன் சாதக, பாதகங்கள், விளைவுகள் குறித்து இந்த அரசு ஆராய்ந்ததா என்றும், அல்லது ஆராய்ந்து சொல்வதற்கு இவர் கேட்பதற்கு தயாராக இருக்கிறாரா, அல்லது சொல்வதற்கு யாரும் தயாராக இல்லையா, அல்லது இவர் கேட்பதற்கு தயாராக இல்லையா என்பது புரியவில்லை என்றும் ஆர்பி உதயகுமார் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

