தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை, செப்டம்பர் 26, 2026 அன்று, கைரேகை பதிவுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள ஆதார் விவரங்களை சரிபார்க்கும் பணியின் ஒரு பகுதியாக, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பை (eKYC) மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த முக்கியப் பணியை குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சீராகச் செய்வதற்காக, கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை சரிபார்ப்பு (eKYC) பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57% eKYC பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் இலக்கை எட்டுவதற்காக, நாளை (26.09.2026) ஒரு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும். இருப்பினும், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் இந்த சிறப்பு முகாமில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இதுவரை தங்கள் குடும்ப அட்டைக்கான கைரேகைப் பதிவை (eKYC) மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், நாளைய தினம் நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை ஒரு பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்தி, தங்களது கைரேகைப் பதிவை (eKYC) உடனடியாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாம், அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை நவீனப்படுத்துவதற்கும் உதவும்.
ரேஷன் கடைகளில் நாளை கைரேகை பதிவு சிறப்பு முகாம்
