தமிழக ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசியில், பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை தங்களுக்குத் தேவையான அளவில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிசி, மத்திய அரசின் இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெறப்படுகிறது.
இந்திய உணவு கழகம் சார்பாக, தமிழக விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், வாணிப கழகத்தின் அரவை ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசியாக மாற்றப்படுகிறது. இது, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஒதுக்கீட்டில் சரிசெய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க மாதந்தோறும் சுமார் 3.30 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. தற்போது, புழுங்கல் அரிசியில் 16 சதவீதமும், பச்சரிசியில் 25 சதவீதமும் உடைந்த அரிசி கலக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில், ரேஷனில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'இம்ப்ரூவ்ட் ரைஸ்' எனப்படும் மேம்படுத்தப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அரிசியில், புழுங்கல் அரிசியில் உடைந்த அரிசியின் அளவு 5 சதவீதமாகவும், பச்சரிசியில் உடைந்த அரிசியின் அளவு 10 சதவீதமாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த மேம்படுத்தப்பட்ட அரிசி, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் இந்த மேம்படுத்தப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

