ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்படவில்லை. மேலும், கைவிரல் ரேகை பதிவு இல்லாதவர்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்களைப் பெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆதார் எண்ணை இணைக்கவும், கைவிரல் ரேகை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பெயர் மாற்றம் காரணமாக, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறந்த நபர்களின் ஆதார் எண் விவரங்களைப் பெற்று, அதை அறிக்கையாகச் சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்களும் வரும் 25ஆம் தேதிக்குள் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது அவசியமாகும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவே இந்த பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை, வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து ரேஷன் கார்டில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.