நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், வேன்களுக்கான மாதாந்திர கட்டணம் திடீரென 9 மடங்கு உயர்த்தப்பட்டதால், கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுவரை ரூ.1,000 ஆக இருந்த மாதாந்திர கட்டணம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரூ.9,160 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்த தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், தங்கள் கல்வி நிறுவனங்களின் பேருந்துகளை சுங்கச்சாவடி கட்டண வசூல் மையங்களுக்கு முன்பாக குறுக்காக நிறுத்தி திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இந்த போராட்டத்தால் பொதுமக்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை தீவிரம்
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை சாலையோரம் நிறுத்த போராட்டம் நடத்துபவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். தற்போது, சுங்கச்சாவடி நிர்வாகம், தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் போலீசார் இடையே இந்த கட்டண உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
