டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான இவர், செக்டர் 82-இல் உள்ள கேந்திரிய விஹார்-2 சொசைட்டியில் வசித்து வந்தார். அவரது உடல், குடியிருப்பில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
1975-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற ராகேஷ் மேத்தா, தனது இந்த தீவிர முடிவுக்கு மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளே காரணம் என்று குறிப்பிட்டு ஒரு தற்கொலை குறிப்பை எழுதி வைத்துள்ளார். இதை நொய்டா போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷீலா தீட்சித் டெல்லியின் முதலமைச்சராக இருந்த காலத்தில், மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயலாளராக ராகேஷ் மேத்தா பணியாற்றினார். இவரது பதவிக்காலத்தில்தான், 2010-ஆம் ஆண்டு டெல்லியில் பிரம்மாண்டமான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
டெல்லியின் முக்கிய போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிமை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ராகேஷ் மேத்தா முக்கிய பங்காற்றினார். டெல்லி அரசுப் பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், டெல்லி மாநகராட்சியின் (MCD) ஆணையராகவும் பணியாற்றியுள்ளார் என்று அவரது முன்னாள் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகேஷ் மேத்தா, 2007-ஆம் ஆண்டு தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று, 2010 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இவரது மறைவு குறித்து அவரது சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் சோகம் நிலவுகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்த நொய்டா போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடல், திங்கள்கிழமை லோதி சாலை தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது.
