நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என உறுதி அளித்திருந்தார். அதன்படி, கடந்த மாதம் 27-ம் தேதி மக்களவையில் பொதுத்தேர்வுகள் (முறைக்கேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள், அதாவது 28-ம் தேதி, இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29-ம் தேதி, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியபோது, நாடாளுமன்ற பேரணியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும், கூச்சல் குழப்பம் நீடித்ததால், பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், 3.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026 மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், மக்களவையிலும் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியபோது, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா பேசுகையில், 'அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன' என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, 'நாடாளுமன்ற பேரணியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். அமைச்சர் அமித் ஷா அவைக்கு வராததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுத்தேர்வுகள் (முறைக்கேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 'யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ், தேசிய தேர்வு முகமை ஆகியவை போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏராளமான போட்டி, நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்தன. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வுகள் (முறைக்கேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 'வினாத்தாளை கசிவில் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர். வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் தண்டனை காலம், அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் எந்த பயனும் இல்லை. கடந்த 2024-ல் நீட் வினாத்தாள் கசிந்தது. மீண்டும், மீண்டும் நீட் வினாத்தாள் கசிவது ஏன்? கடந்த 2024-ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை நிரபராதி என்று சிபிஐ தற்போது கூறுகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் சிபிஐ வழக்கறிஞர்கள் ஆஜராவதைகூட தவிர்க்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் சுமார் 1.25 லட்சம் மாணவ, மாணவியர் தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று பேசினார்.
பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி, 'காங்கிரஸ் தலைவர் கார்கே பொய்களை பரப்புகிறார்' என்று குற்றம் சாட்டினார். இரவு 9 மணி வரை விவாதம் நீடித்தது. இறுதியில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் பொதுத்தேர்வுகள் (முறைக்கேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் புரி, சர்வானந்த சோனோவால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய மசோதாக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

