திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நடிகர் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டுப் பாடியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பாக தமிழக அரசுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயல் இசை நாடக மன்ற தலைவரும், பிரபல பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி விரிவான விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில், 'திருச்செந்தூரில் நான் நடத்திய இசைக்கச்சேரியில் நான் பாடிய பாடல் குறித்து பலர் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திட்டுகிறீர்கள் என்றால், அதற்கான காரணத்தை அறிந்து திட்ட வேண்டும். நான் பாடிய பாடலில் எந்த குறையும் இல்லை. நான் பாடியது இதுதான்: 'நம் தமிழக முதல்வர் போல், அந்த இடத்தில் கமா உள்ளது. தமிழக முதல்வர்போல், வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால், யாரிடம் வேண்டிக் கொண்டால்? நம் தமிழக முதல்வர் போல வேண்டிக்கொண்டால், யாரிடம் வேண்டிக் கொண்டால்? வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால், வெற்றி நிச்சயம் உண்டு. இப்போது புரிகிறதா? வெற்றி நிச்சயம் உண்டு. யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம் தமிழக முதல்வர் வேண்டிக்கொண்டது போல நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம்' என்று சொல்லியிருக்கிறேன்.
மேலும் அவர், 'வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள்.. வெற்றி உண்டு வாருங்கள்…' என்றும் பாடியுள்ளேன். இப்போது புரிகிறதா? வெற்றி எப்படி நிச்சயம்? அதற்கு ஒரு சாட்சி வேண்டும். நீங்களும் வரம் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறை இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள்.
முருகனுக்காக ஏராளமான பாடல்களை நான் பாடியிருக்கிறேன். தமிழறிந்த நான் இதில் பிழை செய்வேனா? முருகனுடன் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். எங்கே ஒப்பீடு இருக்கிறது? சாட்சியாகத்தான் நான் அவரை (விஜய்யை) வைத்துள்ளேன். முருகனுடன் அவரை ஒப்பிடவில்லை. ஆகவே, முருகப்பெருமானின் அருள் பேரருளுக்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாருமில்லை. இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நான் யாரையும் ஒப்பிடவில்லை. யாரையும் குறை சொல்லவும் இல்லை. இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு திட்டவதை விட்டுவிடுங்கள்' என்று அவர் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தின் மூலம், விஜய்யை முருகனுடன் ஒப்பிட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
