அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகளையும் நேரடியாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, நர்சரி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் (தனியார் பள்ளிகள்) கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள், 2023-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்பது விதிமுறை. இருப்பினும், சில தனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகளை மீறி தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளன.
இதன் காரணமாக, அமைச்சர் அலுவலகத்தின் அறிவுரையின் பேரில், அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாயம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் தனியார் பள்ளி இயக்குநரகம் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அதிரடி உத்தரவு தனியார் பள்ளி நிர்வாகங்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விடுமுறை நாட்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், மன அழுத்தமின்றி கல்வி கற்கவும் இந்த உத்தரவு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

