செங்கல்பட்டு அருகே 7 மாத கர்ப்பிணி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, கிராம மக்கள் கிணற்றை பார்வையிட்டனர். அப்போது, கிணற்றுக்குள் ஒரு மூட்டை மிதப்பதை கண்டனர். உடனடியாக கிராம மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கிணற்றில் மிதந்த மூட்டையை மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்டனர். மூட்டையை பிரித்து பார்த்தபோது, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை யார் கொலை செய்து கிணற்றுக்குள் வீசியது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
