கேரளாவில் இருந்து திருச்சிக்கு சிமெண்ட் தயாரிக்க இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், உண்மையில் புழுக்கள் நிறைந்த சுகாதாரமற்ற கழிவுகளாக இருந்தது அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலத்தின் 'கிளீன் கேரளா கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திடமிருந்து, திருச்சியில் உள்ள ஒரு சிமெண்ட் நிறுவனம் 15,070 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கியுள்ளது. இந்த கழிவுகள் லாரிகள் மூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் துறையூர் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியின் டயர் எதிர்பாராதவிதமாக பஞ்சரானது. இதனால், சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியை சரிசெய்ய ஓட்டுநர் மெக்கானிக்கைத் தேடிச் சென்றார். நீண்ட நேரம் லாரி அங்கேயே நின்றதால், அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் லாரி அருகே சென்று பார்த்தபோது, லாரியிலிருந்து ஆயிரக்கணக்கான புழுக்கள் சாலையில் கொட்டிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் என கூறி, சுகாதாரமற்ற கழிவுகளை கேரளா நிறுவனம் அனுப்பியது தெரியவந்தது.
சம்பவ இடத்தைச் சுற்றிலும், சாலையோரத்திலும் பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மைப்படுத்தும் பணியில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். புழுக்களால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவிவிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.