கேரளாவில் உள்ள 'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்' என்ற கனிம நிறுவனத்திற்கு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் மற்றும் பண மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் 'எக்ஸாலாஜிக்' என்ற ஐடி நிறுவனத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சோதனைகள் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற கடும் சந்தேகத்தை இந்த நடவடிக்கைகள் மீண்டும் எழுப்புகின்றன. பினராயி விஜயனை ஏன் பாஜக இன்னும் குறிவைக்கவில்லை?' என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லாததையும் இந்த சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் மத்திய அரசின் போக்கை ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கையால் கேரளாவில் அரசியல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.

