சேலத்தில் நாளை (16.07.2026) காலை தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார் பாமகவின் முன்னாள் எம்எல்ஏ அருள். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது பேட்டியில், "நேற்றும் இன்றும் நாளையும் என ராமதாஸ் எங்களுக்கு எப்போதும் கடவுள்தான். ஆனால், என்னவென்று வழி சொல்லாமல் திடீரென கதவை சாத்திக்கொண்டார். அவரால் கதவு சாத்திக்கொண்டதா அல்லது வேறு யாரேனும் சாத்தினார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தமிழகத்தில் பாமக நிர்வாகிகள் ராமதாஸை விட்டு பிரிந்தபோது, அவருடன் நாங்கள் நின்றோம். அது எங்கள் பாவமா?" என்று உருக்கமாகக் கேட்டார்.
மேலும், "ராமதாஸ் அவர்களை சந்திக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாருக்குமே அவரைப் பார்க்க அனுமதி இல்லை. ராமதாஸூம், அன்புமணி ராமதாஸூம் மீண்டும் இணைந்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாளை சேலத்தில் நடைபெறும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளின் எழுத்துப்பூர்வமான கருத்துகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றும் அருள் தெரிவித்தார்.
தந்தை-மகன் இருவரும் மீண்டும் இணைந்தது குறித்து பேசிய அவர், "இருவரும் பிரியக்கூடாது என்று தைலாபுரம் தோட்டத்து வாசலில் நாங்கள் கத்தி, கெஞ்சி, கதறி அழுதோம். தேர்தலுக்கு முன்பு பிரிந்துவிட்டு, இப்போது இணைந்துவிட்டனர். அன்புமணி ராமதாஸ் கட்சியை விட்டு வெளியேறிய பிறகு, ராமதாஸுடன் நாங்கள் நின்றோம். ஆனால் இப்போது தந்தை-மகன் இருவரும் இணைந்துள்ளனர். பனையூர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அனைவருக்கும் அழைப்பு வந்தது. ஆனால், சில அழைப்புகளை நான் எடுப்பதில்லை" என்று அவர் கூறினார்.
இந்தச் சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீண்டும் இணைந்ததும் பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை சேலத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாமகவின் எதிர்கால நகர்வுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அருள் குறிப்பிட்டுள்ளார். இது பாமகவின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையலாம்.

