விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு: காரணம் என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தடுமாற்றமான பேச்சுகளே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பனையூர் பாபு. அவர் அக்கட்சியின் ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் ஆகவும் இருந்துள்ளார். 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாத நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'சமீப காலமாக விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்கு பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது அவரது இயல்பல்ல. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைத்தள நேரலையில் முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு என தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'நேற்று வரை ஒரு நடிகரை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளை என்று கடுமையாக விமர்சித்த அவர், இன்று அதே பிள்ளையை தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, அவர் இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம் மாற தயாராகிவிட்டார் என்பதையே பட்டப்பகலாக வெளிப்படுத்துகிறது. ஆட்சி அதிகாரங்கள் வரும் போகும். அது நிலையற்றது. அரசியல் தளத்தில், மக்கள் சித்தாந்தங்களை விட கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது என்று அம்பேத்கர் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், இன்று அந்த அபாயகரமான திசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன். கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமைக்கு கீழ், இனிமேலும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version