2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியிடம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இது குறித்து போட்டிக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, 'எங்கள் அணியின் பேட்டிங் வரிசை முற்றிலும் சரிந்துவிட்டது. இன்னிங்ஸ் முழுவதும் ரன் சேர்க்க நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்' எனத் தெரிவித்தார்.
முதலில் பேட்டிங் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 'ஆடுகளம் புதிதாக இருந்ததால், முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை இலக்காக வைக்க விரும்பினோம். எங்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்த முடிவை எடுத்தோம். ஆனால், பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பலால் எங்களால் மீண்டு வர முடியவில்லை' என்று கூறினார்.
இந்தப் போட்டியில் பாத்திமா சனா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், அணியின் தோல்வியால் அது வீணாகிப் போனது. இது குறித்துப் பேசிய அவர், 'நான் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், இறுதியில் அணி தோற்றுவிட்டது. அதனால் எனது தனிப்பட்ட செயல்பாட்டில் எந்த அர்த்தமும் இல்லை. எங்களுக்கு வெற்றி மட்டுமே முக்கியம்' எனத் தெரிவித்தார்.
'அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முழு முயற்சி செய்வோம்' என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த போட்டியில் 56 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 9 ஓவர்களுக்குள்ளேயே இலக்கை எட்டியது. 68 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி தனது குரூப் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தோல்வியே சந்திக்காத அணியாக வலுவான நிலையில் உள்ளது. இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி, பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டி வீழ்த்தியது.
இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால், பாகிஸ்தான் அணி பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்த வெற்றி இந்திய அணிக்கு பெரும் பலத்தை அளித்துள்ளது.

