மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கல்

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். மேலும், 13 பத்மபூஷண் விருதுகளும், 5 பத்ம விபூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

முதல் கட்டமாக 66 பேருக்கு மே மாதம் 25ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களுக்கு நேற்று (ஜூன் 22) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த முக்கிய நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் அதிபரும் சமூக சேவகருமான மயிலானந்தன், குடியரசுத் தலைவரிடம் பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். டென்னிஸ் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ், பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவரின் கையால் பெற்றார். கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பைச் செலுத்திய டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், குடியரசுத் தலைவரிடம் பத்மஶ்ரீ விருதைப் பெற்றார்.

மேலும், வேளாண்மை நுண்ணியியல் துறையில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கே.ராமசாமிக்கு குடியரசுத் தலைவர் பத்மஶ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார். கலைத்துறையில் சிறந்த பங்களிப்புக்காக வெண்கல சிற்பக் கலைஞர் டாக்டர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டருக்கும், புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலத்திற்கும் பத்மஶ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. கல்வித் துறையில் சிறந்த பங்களிப்புக்காக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடிக்கும் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version