வாய் துர்நாற்றம் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் பலருக்கும் பொதுவான பிரச்சனையாகும். இது போன்ற மஞ்சள் கறைகளை அலட்சியப்படுத்தினால், பற்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், சில எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒவ்வொரு துண்டையும் கொண்டு பற்களை மெதுவாக இரண்டு நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை தினமும் காலையில் பின்பற்றி வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் படிப்படியாக அகலும்.
பேக்கிங் சோடா பற்களில் உள்ள கறைகளை அகற்றும் சக்தி கொண்டது. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஈரமான டூத்பிரஷ் மூலம் பற்களைத் தேய்க்கலாம். இந்த முறையை மாதம் இருமுறை செய்து வந்தால், சிறந்த பலன் கிடைக்கும்.
கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின்னர் அதைத் துப்ப வேண்டும். தினமும் இப்படிச் செய்து வந்தால், பற்களின் பின்புறம் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
கற்றாழை ஜெல்லை பற்களில் தடவி, பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இருமுறை செய்வதன் மூலம் பற்கள் வெண்மையாவதோடு, ஈறுகளும் வலுப்பெறும்.
இரண்டு டீஸ்பூன் வெள்ளை வினிகருடன், ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் அரை கப் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து கலக்கி, தினமும் இருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் நிற கறைகளை எளிதாகப் போக்கலாம்.
தேங்காய் எண்ணெய்யை வாயில் ஊற்றி, பத்து நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பின்னர் அந்த எண்ணெயைத் துப்பிவிட்டு, கை விரல்களால் பற்களைத் தேய்த்து, நீரால் வாயைக் கழுவ வேண்டும். இந்த தினசரிப் பழக்கம் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, பற்களையும் வெண்மையாக்கும்.

