தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்றினார். அதிமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்ததாக அவர் கூறினார்.
சட்டசபை மரபுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை யாரும் வழிமொழியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வழிமொழியத் தேவையில்லை என்று விளக்கினார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட்டு மக்களைச் சந்தித்து 47 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி என்றும், அப்போது தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இருப்பினும், அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது, ஒரு தரப்பை மட்டும் முதலமைச்சர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல என்றும், குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
47 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள், 66 சதவீதம் பேர் த.வெ.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்றும், அதிமுகவில் சிலருக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டுவதாகவும் தகவல்கள் வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். எனவே, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தினார்.