பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இணையதளம் மூலம் 24×7 ஆவணங்களை பதிவு செய்யும் புதிய முறையை தமிழக பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வருகை இல்லா ஆவணப்பதிவு முறையின் மூலம், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்களுக்கு சார்பதிவாளரின் ஒப்புதல் கிடைத்ததும், அவரது கையொப்பத்துடன் கூடிய ஆவணம், சம்பந்தப்பட்ட நபரின் அலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும். இந்த நடைமுறையில், ஆவணத்தை எழுதி கொடுப்பவர்கள், பெற்றுக்கொள்பவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் தங்களது ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழியாக ஆதார் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய முறை, முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அபார்ட்மென்ட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கி கடன் அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் போன்றவற்றுக்கு பொருந்தும். பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது Login தகவல்களை பயன்படுத்தி, மேற்படி ஆவணங்களை (ரசீது) இணையவழியில் உருவாக்கி சமர்ப்பிக்கலாம்.
இந்த நவீன தொழில்நுட்பம், பொதுமக்களின் நேரத்தையும், சிரமத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆவணப்பதிவு நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.