அன்னியச் செலாவணியை சேமிக்க நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

மும்பையில் நடைபெற்ற இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) நிறுவனத் தின விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், 'சர்வதேச சந்தையில் நிலவும் குழப்பமான சூழலை கையாள்வதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி அன்னியச் செலாவணியை சேமிக்குமாறு விடுத்த வேண்டுகோள் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் இந்தியாவின் அன்னியச் செலாவணியை சேமித்து, ரூபாய் பலத்தை பாதுகாத்து, பொருளாதாரத்தை இன்னும் வலுவாக வைத்திருக்க முடியும்' என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ஈரான் உடனான அமெரிக்கா போர் நடவடிக்கை மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருளுக்கு ரேஷன் அடிப்படையில் வினியோகம் செய்யப்படுகிறது. பெட்ரோல், உரம் மற்றும் தங்கம் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அதிக அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தங்கத்தின் விலை அதிகரிப்பு ஆகியவை இந்தியாவின் அன்னிய செலாவணிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சூழலில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும், குறைந்தது ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதையும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களையும் தள்ளி வைக்கவும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமன், பிரதமரின் வேண்டுகோள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்றும், அன்னியச் செலாவணியை சேமிப்பதன் மூலம் ரூபாய் மதிப்பை பாதுகாத்து, பொருளாதாரத்தை ஸ்திரமாக வைத்திருக்க முடியும் என்றும் உறுதிப்படுத்தினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version