சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் தமிழக அரசின் முடிவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதுதொடர்பான அரசாணை எண் 564-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை மாவட்ட மீனவர் அமைப்புகள் வரும் 29-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
பட்டினப்பாக்கத்தின் முள்ளிக்குப்பம், முள்ளிமாநகரகம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளின் மீனவர் அமைப்புகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த போராட்ட அறிவிப்பு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள அனைத்து மீனவர் அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பட்டினப்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய அளவில் நெரிசல் ஏற்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்திருந்தார். புதிய தலைமைச் செயலகத்தை உள்ளடக்கிய நிர்வாக நகரத்தை சென்னைக்கு வெளியில் 1000 ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், தமிழக அரசு இதைப் பொருட்படுத்தாததன் விளைவுதான் மீனவர் அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டியது அவசியம் என்றாலும், அதை பட்டினப்பாக்கத்தில் கட்டக்கூடாது என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதுகுறித்த அரசின் நிலைப்பாட்டை தமிழக அரசு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒருபுறம் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மறுபுறம் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், மீனவ மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்றும் முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் மீனவ மக்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். மேலும், கடலுக்கு மிக அருகில் தலைமைச் செயலகம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி மத்திய அரசும் அனுமதி அளிக்காது.
இத்தகைய சூழலில் மீனவ மக்களின் உணர்வுகளை மதிப்பதாக இருந்தால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படாது; இது தொடர்பான அரசாணை எண் 564 ரத்து செய்யப்படும் என்ற ஒற்றை அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிட்டால் அனைத்து சிக்கல்களும் அடங்கிவிடும். ஆனால், நாளுக்கு நாள் இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிடாமல் தமிழக அரசு பிடிவாதம் காட்டுவது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவுக்கு எதிராக மீனவர் அமைப்புகளும், பிற இயக்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தினால் தேவையற்ற பதட்டமும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படக் கூடும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதன் பிடிவாதத்தை கைவிட்டு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை எண் 564-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
