நேபாள நாட்டில் மீண்டும் வரலாறு காணாத கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் வீடு ஒன்று வேரோடு பெயர்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த நான்கு நாட்களாக நீடித்து வரும் தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 49 மாவட்டங்களுக்கு பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளது.
நேபாளத்தின் மலையோரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. நாட்டின் மூன்று முக்கிய நதிகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டிச் செல்வதால், அப்பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, மீட்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புட்வால் நகரில் மட்டும் சுமார் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்ததாலும், தொடர்ச்சியான நிலச்சரிவுகளாலும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதற்கிடையில், ஹிம்லுங் ஹிமால் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 12 பேரைக் காணவில்லை என மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கின் பாதிப்பிலிருந்து நேபாளம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் அங்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடர் நிலைமை மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
