நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கு, சுற்றியிருந்த அனைத்து கட்டிடங்களையும் அடித்துச் சென்றது. ஆனால், ஒரு பச்சை நிற (டர்க்காய்ஸ்) வீடு மட்டும் எந்த சேதமும் இன்றி கம்பீரமாக நின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் உலகளவில் பெரும் வைரலாகி பலரையும் நெகிழச் செய்தது.
இந்த அசாதாரண சம்பவத்தில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒரு குடும்பம், அந்த பச்சை வீடு இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான கதையை பகிர்ந்துள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் லஷ்மி பாண்டே, வெள்ளம் வந்தபோது நானும் என் கணவரும் அருகிலிருந்த எங்கள் கடையில் இருந்ததாகக் கூறினார். வெள்ளத்தின் வேகம் அதிகரித்தபோது, என் மாமியாரையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக வீட்டிற்கு ஓடி வந்தோம்.
'கீழே வாருங்கள்' என்று நான் கத்தியது என் மாமியாருக்கு கேட்கவில்லை. அதனால், நாங்கள் அனைவரும் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்றோம். வெள்ளம் நம்மை அடித்துச் செல்லக்கூடும் என்று நான் கூறியபோது, என் மாமியார் அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியாக இருந்தார். நாங்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டது கடவுளின் செயல் என்று அவர் நம்புகிறார்.
வெள்ளம் வந்தபோது, நாங்கள் 6 பேர் வீட்டின் மேல் மாடியில் இருந்தோம். அருகிலிருந்த வீடு இடிந்து விழுந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் பயந்து போனோம். எங்கள் வீடு மட்டும் இடிந்து விழாமல் உறுதியாக நின்றது கடவுளின் கருணை என்று லஷ்மி பாண்டே தெரிவித்தார்.
மேலும், நாங்கள் மீட்கப்படுவதற்கு முன்பே, சுமார் 4 முதல் 5 பேர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து எங்களை மீட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். நாங்கள் இப்போது மறுபிறவி எடுத்துள்ளதாக உணர்கிறோம். இறைவன் எங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கியுள்ளார் என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
இந்த சம்பவம், எதிர்பாராத இயற்கை சீற்றத்தின்போதும், மனித உயிர்களைக் காப்பதில் வீடுகளின் உறுதித்தன்மை மற்றும் மக்களின் தன்னலமற்ற உதவி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. உலகளவில் பலரையும் இந்த பச்சை வீட்டின் கதையும், அதில் தப்பிய குடும்பத்தின் அனுபவமும் நெகிழ வைத்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த பச்சை வீடு ஒரு குடும்பத்திற்கு மறுவாழ்வு அளித்திருப்பது ஒரு நம்பிக்கையின் சின்னமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

