முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் லண்டனில் மேற்கொண்டுள்ள முதலீட்டு மாநாடு குறித்த செலவு விவரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் திரு. ஜோசப் விஜய் மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் சுற்றுலா சென்று தமிழக மக்களை ஏமாற்றும் வெற்று விளம்பர நாடகத்தை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணங்களில் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் அவசியம். ஆனால், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு லண்டனிலிருந்து வெளியிடும் செய்திக் குறிப்புகள் முரண்பாடுகளும் மர்மங்களும் நிறைந்தவையாக உள்ளன.
தவெக அரசு பெருமை பேசும் பல புதிய முதலீடுகள், ஏற்கெனவே பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களின் வழக்கமான விரிவாக்கப் பணிகளே (Brownfield Projects) ஆகும். குறிப்பாக, தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் ‘சம்வர்தனா மதர்சன்' நிறுவனத்தின் செயல்பாடுகளை ₹11,000 கோடி புதிய முதலீடு என்றும், திருவள்ளூரில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் வழக்கமான ஆலை விரிவாக்கத்தை ₹300 கோடிக்கான ‘வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்' என்றும் தவெக அரசு கணக்குக் காட்டுவது அரசியல் மோசடி என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்வீடனின் 'சிக்மா டெக்னாலஜி' மற்றும் 'ஏர்ன்ஸ்ட் அண்ட் யங்' (EY) நிறுவனங்கள் மூலம் ₹1,000 கோடி முதலீடும் 2,000 புதிய வேலைவாய்ப்புகளும் வரப்போவதாக முதல்வர் திரு. ஜோசப் விஜய் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிக்மா நிறுவனம் ஏற்கெனவே 2026 மார்ச்சில் தமிழகத்தில் தனது மையத்தைத் தொடங்கிவிட்டதாகவும், EY நிறுவனமும் தமிழகத்தில் முன்பிருந்தே இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களையும், ஆலோசனை வழங்கும் கன்சல்டன்சி நிறுவனத்தையும் வைத்துக்கொண்டு, புதிய முதலீடுகளை ஈர்த்துவிட்டதாகத் தவெக அரசு கதை விடுவது யாரை ஏமாற்ற என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தவிர, ஐரோப்பிய ஆட்டோமொபைல் நிறுவனம் ₹3,000 கோடிக்கு 'விருப்பக் கடிதம்' கொடுத்துள்ளதாகக் கூறும் தவெக அரசு, அந்த நிறுவனத்தின் பெயரைக் கூட வெளிப்படையாக அறிவிக்கத் துணியாமல் மறைப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.
பன்னாட்டு அரங்கில் ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் பெயரைக் கூடச் சொல்ல முடியாத அளவிற்கு முதல்வர் திரு. ஜோசப் விஜய் எதை மூடி மறைக்கப் பார்க்கிறார் என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நடத்தும் இந்த முதலீட்டு நாடகங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
லண்டனில் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்களின் உண்மையான பெயர்கள், அதில் புதிய நிறுவனங்கள் எத்தனை, இளைஞர்களுக்குக் கிடைக்கவுள்ள நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் முதல்வரின் இந்த லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்கள் அடங்கிய முழுமையான 'வெள்ளை அறிக்கை'யைத் தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
