தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பை 'Reels Model' அரசு அலட்சியப்படுத்துவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 10 நாட்களில் மட்டும் நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க முதல்வரால் முடியவில்லை என்றும், இது அவரது நிர்வாகத் திறனின்மை என்றும் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை கலாச்சாரம், மாமூல் வேட்டைகள் என குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் தனியாக இருக்கவும், குடும்பத்துடன் வெளியில் செல்லவும் மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் திரு. விஜய் தலைமையிலான அமைச்சரவை, மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், ஆளுக்கொரு 'Reels' எடுத்து, அதை Trending BGM உடன் வெளியிட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது மாண்பற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'மாற்று சக்தி' என்று தங்களைக் கூறிக்கொண்ட தவெகவினை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது, சீரழிந்த சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்படும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் செயல்திறன் முதல்வருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் இல்லை என்றால், அவர்கள் அனைவரும் கூண்டோடு பதவி விலக வேண்டும் என்றும், அப்போது தகுதியான தலைமையை தமிழகம் தேடிக் கொள்ளும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

