உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக 8 வயதுடைய ஆண் யானை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த யானைக்கு ஹீராலால் என பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த கோவிலில் ருக்கு என்ற பெண் யானை பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதற்கு முன்பாக ருக்கு யானையிடம் ஆசி பெறுவது வழக்கமாக இருந்தது. மேலும், கார்த்திகை தீபத்திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளில், அருணாசலேஸ்வரர் வீதியுலா செல்லும் போது, உற்சவங்களுக்கு முன்பாக ருக்கு யானை கம்பீரமாக மாட வீதிகளில் வலம் வரும்.
குறிப்பாக, மகா தீப விழாவின் போது, தீப கொப்பரையை ருக்கு யானை ஆசீர்வதித்த பிறகே, 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மகா தீபம் ஏற்றப்படும். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி, கோவில் வளாகத்திலேயே ருக்கு யானை உயிரிழந்தது. பின்னர், கோவில் அருகிலேயே அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சுமார் 7 வயதில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ருக்கு யானை, ஏறத்தாழ 23 ஆண்டுகள் தனது ஆன்மிகப் பணியை சிறப்பாகச் செய்தது. தனது 30வது வயதில் அது மரணமடைந்தது.
ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட இந்த உலகப் புகழ் பெற்ற சிவத்தலத்திற்கு மீண்டும் ஒரு யானையை கொண்டு வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ருக்கு யானை இறந்து சுமார் 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஒரு ஆண் குட்டி யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்த யானை, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. 8 வயதுடைய இந்த ஆண் யானையின் பெயர் ஹீராலால் ஆகும். இது சுமார் 6 அடி உயரம் கொண்டது. இந்த புதிய யானை, கோவிலின் ஆன்மிகப் பணிகளுக்கும், உற்சவங்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

