உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசியது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் பின்னணியில், முகமது ஷமி கிரிக்கெட் களத்திலிருந்து விடைபெற்று தேர்தல் அரசியலில் ஈடுபடப் போகிறாரா அல்லது அவரது மூத்த சகோதரர் ஹசீப் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடிய பிறகு, முகமது ஷமி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தாலும், பிசிசிஐ தேர்வுக்குழு அவரைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விரக்தியே அவரை அரசியல் பக்கம் ஈர்த்திருக்கலாம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஷமிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் வலியுறுத்திய போதிலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்தச் சூழலில், அவர் அரசியல் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரியை சந்தித்திருப்பதால், கிரிக்கெட்டை விட்டு அரசியலுக்குள் நுழையப் போகிறார் என்றே பலரும் கருதுகின்றனர்.
முகமது ஷமியின் சொந்த ஊரான அம்ரோகா தொகுதியில் அவரை அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி களமிறக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்ரோகா தொகுதியில் உள்ள சுமார் 3.25 லட்சம் வாக்காளர்களில், ஏறத்தாழ 2 லட்சம் பேர் இஸ்லாமிய வாக்காளர்கள் ஆவர். இதில் ஷமியின் குடும்பம் சார்ந்த துருக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுமார் 70,000 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து முகமது ஷமியோ அல்லது அவரது கட்சியோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்குமிக்க அம்ரோகா தொகுதியில் அரங்கேறியுள்ள இந்த திடீர் அரசியல் சந்திப்பு, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு, முகமது ஷமியின் எதிர்கால அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவரது முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
