வைபவ் சூர்யவன்ஷியை தண்ணீர் பாட்டில் சுமக்க வைத்தது தவறு: முகமது கைஃப் விமர்சனம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கையாண்ட விதம் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ் சூர்யவன்ஷிக்கு, அயர்லாந்து தொடரில் அறிமுக வாய்ப்பு வழங்காமல் தண்ணீர் பாட்டில் சுமக்க வைத்தது தவறான முடிவு என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

2026 ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். இதன் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பெற்ற அவருக்கு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான அணியில் இடம் கிடைத்தது. அயர்லாந்து தொடரிலேயே அவர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்காமல் அணியின் பெஞ்சில் அமர வைத்து தண்ணீர் பாட்டில் சுமக்க வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான கடினமான தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அங்கு அவர் 14, 13 மற்றும் 15 ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி போட்டியில் அவர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய முகமது கைஃப், 'வைபவ் ஒரு அசாத்திய திறமைசாலி. அவருக்கு அயர்லாந்து தொடரிலேயே அறிமுக வாய்ப்பு வழங்கி இருந்தால், அவரது பதற்றம் நீங்கி, இங்கிலாந்துக்கு எதிராக இன்னும் அதிக நம்பிக்கையுடன் விளையாடி இருப்பார். அவரது அறிமுகப் பாதையை அணி நிர்வாகம் தேவையின்றி கடினமாக்கிவிட்டது' என்று கொந்தளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'வைபவ் ஆரஞ்சு தொப்பி வென்று உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். ஆனால், முதலில் தண்ணீர் பாட்டில் எடுத்துப் போ என்று அவரிடம் கூறி இருக்கிறார்கள். அவர் ஸ்பெஷலான வீரர். அவரை அயர்லாந்தில் ஆட வைத்திருக்க வேண்டும். அவருக்கு சிறப்பு வழியில் அணியில் இடம் அளித்திருக்க வேண்டும்' என்றார்.

எனினும், இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு ஜிம்பாப்வே தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தகுந்த பதிலடி கொடுத்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 50.33 சராசரியுடன் 151 ரன்கள் குவித்து அசத்தினார். முதல் போட்டியில் அரைசதமும், இரண்டாவது போட்டியில் 20 ரன்களும், மூன்றாவது போட்டியில் அதிரடியாக 81 ரன்களும் குவித்த அவர், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டம், அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version