சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது நாம் எதிர்பார்க்காத முடிவு. இதற்கான காரணத்தை மற்றவர்கள் மீது சுமத்தாமல், ஒரு தலைவன் என்ற முறையில் இந்தத் தோல்விக்கு நானே முழுப் பொறுப்பேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 'வெற்றி வரும்போது புகழ் எனக்கு சேரும்போது, தோல்வியின் பழியையும் நானே ஏற்க வேண்டும். அதுவே ஒரு நல்ல தலைவனுக்கான இலக்கணம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தோல்வியால் முடங்கிவிட மாட்டேன். உடனடியாக அப்டேட் ஆகி மீண்டு வருவேன். நாம் அனைவரும் அப்படித்தான் வர வேண்டும். அதற்காக உங்கள் ஆலோசனைகளும், பரிந்துரைகளும் எனக்கு மிகவும் தேவை. மக்களே எல்லாம். இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? திமுக இன்னும் எப்படி உழைக்க வேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள்' என்று அவர் மக்களிடம் கோரியுள்ளார்.
இதற்காகவே 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதளத்தை திமுக தொடங்கியுள்ளது. இதில் உங்கள் கருத்துக்களைப் பதிவிடுவது மிகவும் எளிது. உங்கள் குரலிலேயே பதிவிடலாம், நேரடியாக டைப் செய்யலாம், அல்லது உங்கள் கருத்தை எழுதி அதன் புகைப்படத்தைப் பதிவேற்றலாம். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் என்னிடம் வந்து சேர்ந்துவிடும்.
'உங்கள் கருத்துக்களைப் படித்து, பரிசீலித்து, நமது அடுத்தகட்ட நடவடிக்கையை வடிவமைக்கப் போகிறேன். நம்முடைய அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு அனைத்தையும் மாற்றியாக வேண்டும். காலத்திற்கேற்றவாறு நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் கருத்துக்களின் அடிப்படையில்தான் திமுக 2.0 உருவாகும். கட்சியின் அனைத்து நிலைகளிலும் தேவையான மாற்றங்களைச் செய்து, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும் வகையில் செயல்படுவோம். உடன்பிறப்பே, நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன்' என மு.க.ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.