கருத்து சுதந்திரத்திற்கு ஒரு எல்லைக் கோடு உண்டு என்றும், இல்லாத தகவல்களை தங்களுக்கு ஏற்றவாறு வளைக்கக் கூடாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தேர்தல் ஆணையரை ஒரு தனிநபராக மாற்றினால் மட்டும் பிரச்சனைகள் முடிந்துவிடாது என்று கூறினார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, தமிழக வெற்றி கழகம் (தவெக) தேர்தல் ஆணையர் பணியே மோசடி என்று அறிக்கை வெளியிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையர் மாற்றத்தை மட்டும் முன்னிறுத்துவது, தனிநபர்களை பலிகடா ஆக்கி தப்பிக்கும் முயற்சி என்றும், திசைதிருப்பும் அரசியலுக்கு தமிழக வெற்றி கழகம் இரையாகாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வழங்கப்படாது என்ற தமிழக அரசின் புதிய உத்தரவு, கருத்து சுதந்திரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கினார்.
கருத்து சுதந்திரத்தின் 'லட்சுமண கோடு' கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு ஒரு எல்லை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வேண்டுமென்றே இல்லாத தகவல்களை தங்களின் வசதிக்கு ஏற்ப வளைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
