தமிழக கனிமவளத்துறை அமைச்சர் காரைக்குடி எம்எல்ஏ டி.கே. பிரபு, தனக்கு வேறு துறையை மாற்றி தருமாறு முதல்வர் விஜயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல், விதிகளை மீறி செயல்பட்ட குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக, பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை உடனடியாக செலுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
அமைச்சரின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த குவாரி உரிமையாளர்கள், அவரை பதவியில் இருந்து அகற்ற முக்கிய பிரமுகர்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்து முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. சட்டவிரோத குவாரிகளை மூடிய அமைச்சர் பிரபுவுக்கு, பல்வேறு வழிகளில் அந்த கும்பல் நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும், அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில், கட்சியில் உள்ள சிலரே பணத்தாசை காரணமாக அவர் மீது புகார்களை அள்ளி வீச துணிந்துள்ளதாக அவருக்கு தெரியவந்துள்ளது.
பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், அவரால் இந்த துறையில் வெளிப்படையாக செயல்பட முடியாமல் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால், கனிமவளத்துறை அமைச்சர் பிரபு, முதல்வர் விஜயை சந்தித்து தனக்கு வேறு ஒரு துறை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெளி மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்ததாலும், சட்டவிரோத குவாரிகளை மூடியதாலும், சம்பந்தப்பட்ட கும்பல் தொடர்ந்து பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நெருக்கடிகளை சமாளிக்க முடியாததால், அமைச்சர் பிரபு தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
கனிமவளத்துறை அமைச்சரை சுதந்திரமாக செயல்பட முதல்வர் விஜய் அனுமதித்தால், அவரது அதிரடி நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து, முதல்வர் விஜய் அவரை பதவியில் இருந்து விடுவித்தால், அது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்று த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றன.
இந்த சூழ்நிலையில், அமைச்சர் பிரபுவின் கோரிக்கையை முதல்வர் விஜய் பரிசீலிப்பாரா அல்லது அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கனிமவளத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கைகள் தொடருமா அல்லது அவர் வேறு துறைக்கு மாற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
