தமிழ் உச்சரிப்பில் தனக்கு சிரமம் இருப்பதை நிதியமைச்சர் மரியவில்சன் ஒப்புக்கொண்டார். இருப்பினும், தனது தாய்மொழி தமிழ் என்றும், பிறந்து வளர்ந்த சூழல்களை விவரித்தும் அவர் பேசினார்.
வரவு செலவு திட்டம் மீதான பதிலுரையின் போது பேசிய நிதியமைச்சர் மரியவில்சன், 'நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான். தமிழ் உச்சரிப்பு எனக்கு கொஞ்சம் சிரமம் தான். அதை நான் மறுக்கவில்லை. எனக்கு தாய்மொழி தமிழ் தான். நான் பிறந்தது பாண்டிச்சேரி, வளர்ந்தது திருவாரூர், படித்தது சென்னை, என்னை தத்தெடுத்தது ஆர்.கே.நகர்' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், 'கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம். கடமை இருந்தால் வீரன் ஆகலாம். பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம். இம்மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம். JPR எப்படி எம்.ஜி.ஆருக்கு இருந்தாரோ, அதுபோல நான் விஜய்க்கு இருப்பேன்' என்று கூறினார்.
நிதி ஆதாரம் கிடைத்தவுடன் இந்த அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார். தி.மு.க ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை 28 மாதங்கள் கழித்து நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.
'பொய் சொல்லாமல், குறுக்கு வழியை கடைபிடிக்காமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி. முதலமைச்சர் விஜய் ஒரு உதாரணம்' என்றும் அவர் தெரிவித்தார்.
முந்தைய அரசு டெண்டர் வழங்குவதில் செய்த முறைகேடுகள் ஒவ்வொன்றையும் ஆராய ஆரம்பித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். வெற்றி அடைவதற்காக நேர்மையான வழியை கடைபிடித்தால் அனைத்தும் சாத்தியம் என்பதற்கு முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
