2026க்கு முன், பின்: தமிழக அரசியல் மாறும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

தமிழக அரசியல் வரலாறு இனி 2026க்கு முன்பு, 2026க்கு பின்பு எனப் பேசப்படும் என்றும், 75 ஆண்டுகால பண அரசியலைத் தூக்கி எறிந்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தவெக-வின் முன்னணி தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அதிரடியாகப் பேசியுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் தவெக-வில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 'நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் ஆதரவும், அவர்களது வாக்குகளும் தவெக-வுக்குக் கிடைத்ததால்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றி சாத்தியமானது. கொள்கை ரீதியாக அதிமுகவும் தவெக-வும் ஒன்றுதான். இன்று சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 2 விஜயபாஸ்கர்கள் தவெக-வில் இணைந்ததன் மூலம், கிட்டத்தட்ட 60 சதவீத அதிமுக எங்களுடன் இணைந்துவிட்டது' என்று அவர் குறிப்பிட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் திரைமறைவில் ஒன்று சேருவதற்குத் திட்டமிட்டுள்ளனர் என்றும், அவர்கள் இருவரும் கைகோர்ப்பதற்கு முன்பாக, ஒட்டுமொத்த அதிமுகவின் உண்மையான விசுவாசிகளையும் தவெக-வில் இணைக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் ஜோசப் விஜய் மிகச்சரியான அரசியல் வியூகத்தை வகுத்தார் என்றும் அமைச்சர் கூறினார். திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டணி அமைக்க முயற்சி செய்ததை எதிர்த்துத்தான், எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்ட மரகதம் குமரவேல் போன்ற விசுவாசிகள் தங்களது எம்எல்ஏ பதவியைத் தைரியமாக ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர்.

ஆட்சியை இழந்து தனித்துவிடப்பட்ட திமுக, எப்படியாவது குறுக்கு வழியில் தவெக அரசைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்கிறது என்றும், தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை திமுக தரப்பில் குதிரை பேரம் பேசப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் சமயத்தில் கூட, முதலமைச்சர் விஜய்யை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கப் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. எங்குத் தவெக-வுக்குக் காவல் துறை பாதுகாப்பு இருந்ததோ, அங்கு மட்டும்தான் கடைசி 15 நாட்களில் தலைவர் விஜய்யால் செல்ல முடிந்தது. குறிப்பாகத் திருப்பூரில் காவல் துறையினர் திட்டமிட்டே விலகிச் சென்று, மீண்டும் ஒரு பயங்கரமான செயற்கைக் கூட்ட நெரிசல் விபத்தை ஏற்படுத்தி சதி செய்ய திமுக முயற்சி செய்தது என்றும் அவர் தெரிவித்தார். கரூரில் எங்களுக்கு என்று ஒரு தனிக் கணக்கு வழக்கு இருக்கிறது, அதை முடிக்காமல் விடமாட்டோம் என்றும், தவறு செய்தவர்கள் மீது சட்டம் நிச்சயம் தன் கடமையைச் செய்யும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, 'நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை. தேர்தலைக் கண்டு எங்களுக்குப் பயமில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் வந்தாலும், 234 தொகுதிகளிலும் தவெக தனித்து நின்று அமோக வெற்றி பெறும். தவெக-வில் இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது' என்று நம்பிக்கையூட்டினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த அனல் பறக்கும் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version