சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் அதிக புகார்கள் வருவதால், அவற்றின் பராமரிப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர், 'நம்ம சாலை' செயலி மூலம் சீரான சாலைகள் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், சென்னை மாநகராட்சி சாலைகளில் ஏற்பட்ட புகார்களின் அடிப்படையில், பராமரிப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'பேட்ச் வொர்க்' முறையில் சாலைகள் அமைக்கப்பட்ட இடங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
சென்னை-கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தட சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வியாசர்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும் என்றும், சென்ட்ரல், கத்திப்பாரா, கோயம்பேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கோண வழித்தடச் சாலை ரூ.400 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சாலை விதிகளை தீவிரமாக கண்காணிக்க, ரூ.500 கோடி மதிப்பில் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும். கேரள மாநிலத்தைப் போலவே, தமிழ்நாட்டின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் புதிய பல்நோக்கு உள் விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். பாரா ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்காக சென்னையில் ஒரு சிறப்பு பயிற்சி மையம் நிறுவப்படும். நேரு உள் விளையாட்டரங்கத்தில் ரூ.25 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், கரூர், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.14 கோடியில் புதிய பல்நோக்கு உள் விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். விளையாட்டு உபகரணங்களுக்கான வங்கி ரூ.5.15 கோடியில் ஏற்படுத்தப்படும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.5 கோடியாகவும், வெள்ளிக்கு ரூ.3 கோடியாகவும், வெண்கலத்திற்கு ரூ.2 கோடியாகவும் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது உரையில் தெரிவித்தார்.

