மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக சட்டசபையில் ஒருமனதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை ஏற்க முடியாது என முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமலும், படுகை மாநிலங்களின் இசைவு மற்றும் மத்திய அரசின் அனுமதியைப் பெறாமலும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை சட்டசபை வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரிப் படுகை பற்றாக்குறை படுகை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதால், புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது என்றும், இது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினை என்றும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, பிற மாநிலங்களின் இசைவு மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசுக்கு அறிவுறுத்துமாறு சட்டசபை வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ, அனுமதி வழங்கவோ கூடாது என மத்திய நீர்வள குழுமத்திற்கும் பேரவை வலியுறுத்தியுள்ளது. கர்நாடக அரசின் முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சட்டசபை தனது முழு ஆதரவை ஒருமனதாக தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களான கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டசபை முன்னாள் செயலாளர் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.