மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை, கடற்கரையின் உள்கட்டமைப்பு மற்றும் மணல் பரப்புப் பகுதிக்குச் செல்ல வருபவர்களை முழுமையாகச் சோதித்த பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.
சமீபத்தில் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கையின் அடிப்படையில், திடீர் போராட்டங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் அல்லது அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த அதிரடிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காமராஜர் சாலையில் உள்ள சேவைப் பாதையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையின் முக்கிய நுழைவு வாயில்கள் மற்றும் சேவைப் பாதைகளில் இரும்பினாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அவ்வழியாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முழுமையாகச் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் கும்பலாகக் கூடும் இளைஞர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த திடீர் போலீஸ் கெடுபிடிகள் மற்றும் சோதனைகள் காரணமாக மெரினா கடற்கரைக்கு வரும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும், நகரின் அமைதியைப் பேணவும், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்கவுமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கில், கடற்கரை மணல் பகுதியில் ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்துப் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

